குடியேற்ற மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்து கொள்ளுதல்
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய குடியேற்ற மோசடிகள்; அதோடு, விசா மற்றும் குடியேற்ற ரீதியான ஏமாற்று வேலைகளிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்வது எப்படி.
நீங்கள் நியூசிலாந்து வருவதற்கான விசாவைப் பெறத் திட்டமிட்டிருந்தால், உங்களின் பணத்தைத் திருட முயலும் நபர்களிடமோ அல்லது வாக்குறுதி அளித்தபடி இல்லாத வேலைகளில் உங்களைச் சேர்க்க முயல்பவர்களிடமோ எச்சரிக்கையாக இருங்கள்.
நீங்கள் விழிப்புணர்வுடன் கவனிக்க வேண்டிய மோசடிகள் மற்றும் விசா மோசடிகளில் இருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ள நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் ஏற்கனவே நியூசிலாந்தில் வேலை செய்து கொண்டிருந்தால், அங்கு நீங்கள் சுரண்டப்படுவதாகக் கருதினால், நியூசிலாந்து குடியேற்றத் துறையிடம் (INZ) உதவி கேட்கத் தயங்காதீர்கள். நாங்களும் நியூசிலாந்து வேலைவாய்ப்புத் துறையும் உங்களுக்கு உதவுவதுடன், தேவைப்பட்டால் தகுந்த நடவடிக்கையும் எடுப்போம்.
புலம்பெயர் தொழிலாளர் சுரண்டல் — நியூசிலாந்து வேலைவாய்ப்புத் துறை
மோசடிக்கான அறிகுறிகளைக் கண்டறிதல்
இத்தகைய மோசடிக்கான அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனே செயல்படுவதை நிறுத்திவிட்டு கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் சந்தேகங்கள் குறித்து நீங்கள் எங்களிடம் பேசலாம்.
வேலைக்காகப் பணம் செலுத்தக் கோரப்படுதல்
'செயலாக்கக் கட்டணம்' (ப்ராசசிங்) அல்லது 'வேலைவாய்ப்பு ஏற்பாட்டுக் கட்டணம்' (பிளேஸ்மென்ட்) என அழைக்கப்படும் வேலைக்கான கட்டணங்களைச் செலுத்துமாறு நீங்கள் கோரப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
நியூசிலாந்து பணியமர்த்துபவர்கள் ஒரு வேலைக்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கவோ அல்லது அவர்களின் ஆள்சேர்ப்புச் செலவுகள் எதையும் உங்களைச் செலுத்தச் சொல்லவோ முடியாது. இதில் மறைமுகமாக மூன்றாம் தரப்பு நபர்கள் மூலமாகப் பணம் கோருவதும் அடங்கும்.
நீங்கள் பின்வருவனவற்றை பயன்படுத்துகிறீர்கள் என்றால்:
- ஒரு ஆள்சேர்ப்பு முகமை எனில், அவர்கள் உங்களிடம் நேரடியாக வசூலிக்க விரும்பும் அதிகப்படியான கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஒரு ஆள்சேர்ப்பு முகமையின் கட்டணங்கள் அவர்கள் உங்களுக்கு வழங்கும் சேவையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
- ஒரு குடியேற்ற ஆலோசகர் எனில், அவர்களின் சேவைகளுக்காக நீங்கள் நியாயமான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
நியூசிலாந்து குடியேற்றத் துறை உங்களிடமிருந்து விண்ணப்பக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறது. உங்கள் விண்ணப்பத்திற்கான சான்றுகளைச் சேகரிக்கும் போது, மருத்துவப் பரிசோதனையை முடிப்பது போன்ற செலவுகளுக்காக நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.
விண்ணப்ப முன்னுரிமை மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கான அணுகலைப் பெறுதல்
இந்த மோசடியில், உங்கள் ஆலோசகர், முகவர், ஆலோசனையாளர் அல்லது பிற மூன்றாம் தரப்பினர் தங்களுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒரு முடிவிற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் அல்லது விரைவான முடிவைப் பெற்றுத்தர முடியும் என்று கூறுகிறார்கள்.
நீங்கள் ஒரு ஆலோசகரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நியூசிலாந்து குடியேற்றத் துறை:
- நீங்கள் ஒரு ஆலோசகரைப் பயன்படுத்துவதால் உங்கள் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளிக்காது, மற்றும்
- குடியேற்ற விதிகளுக்கு உட்பட்டு தன்னிடம் உள்ள தகவல்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் குறித்து முடிவு செய்கிறது.
நீங்கள் பொய் சொல்லக் கோரப்பட்டால்
வேலை அல்லது விசா தகுதியைப் பெறுவதற்காகப் பொய் சொல்வது சட்டவிரோதமானது ஆகும்.
உங்கள் ஆலோசகர் அல்லது பிற மூன்றாம் தரப்பினர் உங்களை பொய் சொல்லுமாறு அறிவுறுத்தினால், அவர்கள் சட்டத்தை மீறுகிறார்கள் என்று அர்த்தம் ஆகும். இது அவர்கள் பிற குடியேற்றம் அல்லது வேலைவாய்ப்புச் சட்டங்களையும் மீறக்கூடும் என்பதற்கான அறிகுறி ஆகும்.
நீங்கள் வழங்கும் தகவல்கள் உண்மையாக இருப்பது முக்கியம். நீங்கள் அளிக்கும் தவறான அறிக்கைகள் உங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால விசா விண்ணப்பங்களைப் பாதிக்கும்.
உங்களுக்கு ஒரு நியூசிலாந்தருக்கு இணையான குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உரிமைகள் இல்லை என்று கூறப்பட்டால்
இது உண்மையல்ல. குடியேறியவர்கள் உட்பட நியூசிலாந்தில் உள்ள அனைவருக்கும் சமமான குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உரிமைகள் உள்ளன. இதில் ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் மற்றும் மருத்துவ விடுப்புக்கான உரிமை, மற்றும் பாதுகாப்பற்ற பணி நடைமுறைகள் குறித்து புகார் அளிக்கும் உரிமை ஆகியவை அடங்கும்.
உங்களுக்கு இந்த உரிமைகள் இல்லை என்று கூறுபவர்கள், குடியேற்றம் அல்லது வேலைவாய்ப்புச் சட்டங்களை மீறுபவர்களாக இருக்கலாம்.
தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகள் – நியூசிலாந்து வேலைவாய்ப்புத் துறை
குடியேறிய தொழிலாளர் சுரண்டல் குறித்து புகார் அளித்தல் – நியூசிலாந்து வேலைவாய்ப்புத் துறை
தங்குமிடத்துடன் கூடிய தொகுப்புத் திட்டம் உங்களுக்கு வழங்கப்பட்டால்
நியூசிலாந்தில் ஒரு வேலையுடன் தங்குமிடம் வழங்கப்படுவது சாதாரணமான ஒன்றல்ல.
பண்ணையில் வேலை செய்வது அல்லது தங்குமிடம் வழங்கும் நிறுவனத்தில் வேலை செய்வது போன்ற சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இது சாத்தியமானது.
விசா, வேலை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய 'தொகுப்பு' சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் – மோசடியாளர்கள் தங்குமிடத்திற்காக உங்களிடம் அதிகப்படியான தொகையை வசூலிக்க முயலலாம்.
உங்களுக்கு வசிப்பிட (residence) வாக்குறுதி அளிக்கப்பட்டால்
நியூசிலாந்து படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. தற்காலிக விசா மூலம் நீங்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் இது நீங்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கு வழிவகுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மோசடியாளர்கள் பெரும்பாலும் வசிப்பிடம் கிடைப்பது எவ்வளவு எளிது என்பதை மிகைப்படுத்திக் கூறுவார்கள். எனவே விழிப்புடன் இருங்கள்; வசிப்பிடம் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்டத் திறன், அனுபவம், கல்வித் தகுதி அல்லது குறிப்பிட்ட தொழில்கள் தேவைப்படும்.
எதிர்கால வருமானம், வீடு வாங்குதல் அல்லது அரசாங்க நிதியுதவியைப் பெறுதல் குறித்த வாக்குறுதிகள்
உங்களுக்கு வழங்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே இங்கு குடிபெயர்வது குறித்து நீங்கள் முடிவெடுக்க வேண்டும், நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாத எதிர்கால வாக்குறுதிகளை நம்பி அல்ல.
பொதுவாக, உங்களிடம் நிரந்தரமாகத் தங்குவதற்கான விசா இருந்தால் ஒழிய, நீங்கள் வீடு வாங்கவோ அல்லது அரசாங்க நிதி உதவியைப் பெறவோ முடியாது. கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக நீங்கள் கூடுதல் வேலைகளைச் செய்யவும் முடியாது.
நீங்கள் ஒரு ஆலோசகரை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டால்
விசா விண்ணப்பம் செய்வதற்கு நீங்கள் ஒரு ஆலோசகரை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. எங்களது இணையதளத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி நீங்களாகவே விசா விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
நீங்கள் ஒரு ஆலோசகரைப் பயன்படுத்த விரும்பினால், உரிமம் பெற்ற குடியேற்ற ஆலோசகர் ( LIA), சான்றளிக்கப்பட்ட ஒரு நியூசிலாந்து வழக்கறிஞர் அல்லது குடியேற்ற ஆலோசனைகளை வழங்க சட்டப்பூர்வமாகத் தகுதிபெற்ற ஒருவரை மட்டுமே பயன்படுத்தவும். உங்கள் மொழி, இருப்பிடம் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப நீங்கள் ஒரு ஆலோசகரைத் (LIA) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பம் குறித்த அறிவிப்புகள் உங்களுக்குக் கிடைக்காதபோது
உங்கள் ஆலோசகர் அல்லது மூன்றாம் தரப்பினர் உங்கள் விண்ணப்பம் குறித்த தகவல்களை வழங்கவில்லை என்றால், விண்ணப்பங்களைச் செயல்முறைப்படுத்த எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறிய எங்கள் இணையதளத்திற்குச் செல்லலாம்.
உங்களுக்குத் தகவல்கள் கிடைக்காதது குறித்து நீங்கள் கவலைப்பட்டால், விண்ணப்பத்தைச் சரிபார்க்க எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பத்தைச் செயல்முறைப்படுத்த எடுக்கும் கால அளவு
நியூசிலாந்து குடியேற்றத் துறை என உரிமை கோரும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் அல்லது இணையதளத்தை எதிர்கொண்டால்
நியூசிலாந்து குடியேற்றத் துறையின் சில ஆன்லைன் சேவைகளைப் போலவே போலி மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் மோசடி செய்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. போலி இணையதளங்களுக்குச் சென்று நீங்கள் ஏமாற்றப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, இந்தச் சேவைகளுக்கான எங்கள் அதிகாரப்பூர்வ இணைப்புகளைப் பயன்படுத்தவும். இணையதள முகவரியில் ‘.immigration.govt.nz’ என்பது துல்லியமாக இருப்பதைச் சரிபார்ப்பதன் மூலம் இதனை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மோசடி இணையதள முகவரிகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றலாம் என்பதால் கவனமாகச் சரிபார்க்கவும்.
நியூசிலாந்து குடியேற்றத் துறையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள் ‘immigration.govt.nz’ அல்லது ‘mbie.govt.nz’ என்று முடிவடையும்.
உங்களுயடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள் என்பது இணையப் பாதுகாப்பு குறித்து மக்கள் அறிந்துகொள்ள நியூசிலாந்து அரசால் உருவாக்கப்பட்ட ஒரு இணையதளமாகும். ஆன்லைன் மோசடிகளைக் கண்டறிவது குறித்த கூடுதல் வழிகாட்டுதல்களை இது கொண்டுள்ளது.
உடனடி உதவியைப் பெறுங்கள் — உங்களுயடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள்
விசா கட்டணம் அல்லது மருத்துவக் கட்டணத்தை ஒரு வங்கிக் கணக்கில் செலுத்துமாறு நீங்கள் கேட்கப்படுதல்
விசா விண்ணப்பக் கட்டணங்களை ஒரு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுமாறு நாங்கள் ஒருபோதும் உங்களிடம் கேட்க மாட்டோம். எங்களது ஆன்லைன் மற்றும் காகித அடிப்படையிலான விண்ணப்பப் படிவங்களில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாக மட்டுமே நாங்கள் கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறோம். நீங்கள் நியூசிலாந்திற்கு வெளியே இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட விசா விண்ணப்ப மையத்திலும் உங்கள் விசா கட்டணத்தைச் செலுத்தலாம்.
நியூசிலாந்திற்கு வெளியே உள்ள அலுவலகங்கள் (விசா விண்ணப்ப மையங்கள்)
அங்கீகரிக்கப்பட்ட குழு மருத்துவர்கள் மற்றும் உங்கள் தாய்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பிற மருத்துவர்கள் மட்டுமே குடியேற்ற மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்களை ஏற்க முடியும். மருத்துவப் பரிசோதனைகளுக்காக எங்களிடம் பணம் செலுத்துமாறு நாங்கள் ஒருபோதும் உங்களிடம் கேட்க மாட்டோம். இந்தக் கட்டணங்கள் அந்தந்தக் குழு மருத்துவர் அல்லது பதிவுசெய்யப்பட்ட மருத்துவரின் கிளினிக்கில் செலுத்தப்பட வேண்டும்.
X-ரே மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய மருத்துவர்கள்
மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்
நீங்கள் ஒரு ஆலோசகரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை நீங்கள் ஆலோசகரை நாடினால், அவர் உரிமம் பெற்ற குடியேற்ற ஆலோசகராகவோ, சான்றளிக்கப்பட்ட நியூசிலாந்து வழக்கறிஞராகவோ அல்லது குடியேற்ற ஆலோசனைகளை வழங்கச் சட்டப்பூர்வத் தகுதியுள்ள நபராகவோ இருப்பதை உறுதி செய்யவும்.
நீங்கள் ஒரு ஆலோசகர் அல்லது ஆள்சேர்ப்பு நிறுவனத்தின் சேவையைப் பெற விரும்பினால், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களின் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. இதன் மூலம் அவர்களின் சேவைகளுக்கு நீங்கள் நியாயமான தொகையைத்தான் வழங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் அணுகுவது நியூசிலாந்து குடியேற்றத் துறையின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சேவைகள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இணையதள முகவரியில் ‘.immigration.govt.nz’ என்பது சரியாக இருக்கிறதா என்று கவனமாகச் சரிபார்க்கவும் அல்லது எங்களது அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகச் சேவைகளைப் பயன்படுத்தவும்.
உங்களுக்கு வேலை வழங்க முன்வரும் நிறுவனம் அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அங்கீகாரம் பெற்ற நிறுவனப் பணி விசா (Accredited Employer Work Visa) மூலம் பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் அனைத்து நிறுவனங்களும் முதலில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எங்களது இணையதள வசதியைப் பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்தவும்.
அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பட்டியல்
உங்களைப் பணியமர்த்தும் நிறுவனத்திடம் நேர்காணல் போன்ற வழிகளில் நேரடியாகப் பேசுங்கள். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் புலம் பெயர்வது என்பது ஒரு பெரிய பொறுப்பு அல்லது அர்ப்பணிப்பாகும். எனவே, அந்த வேலைக்கு நீங்கள் பொருத்தமானவர் தானா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் திறமைகள் குறித்து உண்மையாக இருங்கள்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் விசா விருப்பங்கள் குறித்தும், மற்றவர்கள் உங்களுக்கு வழங்கும் தகவல்கள் துல்லியமானவை அல்லது நடைமுறைக்குச் சாத்தியமானவைதானா என்பது குறித்தும் விளக்க நாங்கள் உதவ முடியும். உங்கள் விண்ணப்பம் தொடர்பான தகவல்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். ஆங்கிலம் உங்கள் தாய்மொழியாக இல்லையெனில், உங்களுடன் உரையாட மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரை எங்களால் இணைக்க முடியும்.
நியூசிலாந்து விசா விருப்பங்கள்
முடிந்தால், உங்களைப் போலவே நியூசிலாந்திற்குப் பயணம் மேற்கொண்ட உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களிடம் கேட்டு மேலதிக ஆராய்ச்சிகளைச் செய்யுங்கள்.
உங்கள் பணியமர்த்துபவர் உங்களுக்குத் தங்குமிட வசதி அளிப்பதாக இருந்தால், அது தொடர்பான புகைப்படங்களைக் கேளுங்கள்; மேலும், 'டெனென்சி சர்வீசஸ்' இணையதளத்திற்குச் சென்று, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் வாடகைத் தொகையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அதோடு, ஒரு வாடகைதாரராக உங்களுக்கு இருக்கும் உரிமைகள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
சந்தை வாடகையை ஒப்பிடுக - டெனென்சி சர்வீசஸ்
மொழிபெயர்க்கப்பட்ட வளங்கள் - டெனென்சி சர்வீசஸ்
வாழ்க்கைச் செலவு மற்றும் மருத்துவ வசதிகளைப் பெறுவது உள்ளிட்ட நியூசிலாந்து பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். எங்களது 'லிவ் அண்ட் வொர்க்' இணையதளத்தில் பயனுள்ள தகவல்கள் உள்ளன.
லிவ் அண்ட் வொர்க் நியூசிலாந்து
நியூசிலாந்து தொழிலாளராக உங்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு நியூசிலாந்து இணையதளத்தில் பல மொழிகளில் பயனுள்ள தகவல்கள் உள்ளன; மேலும் குறைந்தபட்ச உரிமைகள், பொறுப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது குறித்த இலவச கற்றல் தொகுதியும் அங்கு உள்ளது.
தொழிலாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் – வேலைவாய்ப்பு நியூசிலாந்து
மோசடியாளர்கள் சில நேரங்களில் போலி விசாக்களை வழங்கக்கூடும். ஒரு முகவர் அல்லது ஆலோசகர் உங்களுக்கு நியூசிலாந்து விசா வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறினால், அது உண்மையானதுதானா என்பதை எங்களது விசா சரிபார்ப்புச் சேவையை பயன்படுத்தி நீங்கள் சரிபார்க்கலாம்.
உங்கள் நாட்டில் உள்ள காவல்துறை போன்ற உள்ளூர் அதிகாரிகளிடம் மோசடிகளைப் பற்றிப் புகாரளிக்கவும். நீங்கள் நியூசிலாந்தில் இருந்தால், உங்களுயடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள் என்ற இணையதளத்தில் ஆன்லைன் மோசடிகள் குறித்துப் புகாரளிக்கலாம்.
உடனடி உதவியைப் பெறுங்கள் — உங்களுயடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள்
புலம்பெயர்ந்தோருடன் பணியாற்றும் அமைப்புகளுக்கான வளங்கள்
நீங்கள் நியூசிலாந்தில் படிக்க, வேலை செய்ய அல்லது வசிக்கத் திட்டமிடுபவர்களுடன் இணைந்து பணியாற்றினால், அவர்கள் குடியேற்ற மோசடிகள் அல்லது ஏமாற்று வேலைகளைக் கண்டறிய உதவ எங்களது சமூக ஊடகத் தொகுப்பை பயன்படுத்தவும்.
இந்த வளங்கள் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் கிடைக்கின்றன.
குடியேற்ற மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பு சமூக ஊடகத் தொகுப்புகள்